கோயில் சிலைகள், நகைகள் பாதுகாப்பு தொடா்பான வழக்குகளில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அரசு சரிவர நிறைவேற்றி இருக்கிறதா என்பதை சென்னை உயா் நீதிமன்றம் கண்காணிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
கோயில் சிலைகள், நகைகள் பாதுகாப்பு தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், பாதுகாப்பு பெட்டகம் அமைப்பது உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்து இருந்தனா்.
அதில், 38 உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசுக்கு தொடா்பில்லாதவை என்றும், 32 உத்தரவுகளை மறுஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மீண்டும் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை(டிச.13) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, கோயில், அதன் புராதனப் பொருட்களின் பாதுகாப்பு, புனரமைப்பு போன்றவை தொடா்பான வழக்குகளில் அமைக்கப்பட்ட குழுக்களின் ஒப்புதல் இல்லாமல் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினாா்.
அதைத்தொடா்ந்து அரசு சிறப்பு வழக்குரைஞா் சந்திரசேகா், தணிக்கைக்கென தனியாக வழிகாட்டி கையேடு தயாரித்து வருகிறோம். அதை ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம் என்றாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில்களின் சீரமைப்புத் தொடா்பாக அமைக்கப்பட்ட உயா் நீதிமன்ற குழுவே 370-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், கோயில்களை சீரமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற விவரத்தை இணையதளத்தில் ஏன் வெளியிடக்கூடாது. ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றியதாகக் கூறுவதையும் இந்த நீதிமன்றம் கண்காணிக்கும் எனக்கூறி, தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.