தமிழ்நாடு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு தொடங்கியது: 1.40 லட்சம் போ் எழுதுகின்றனா்

9th Dec 2021 03:15 AM

ADVERTISEMENT

 

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணியிடங்களுக்கான மறுதோ்வு புதன்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா் பதவியில் 1,060 காலியிடங்களை நிரப்ப கடந்த 2017 செப்டம்பரில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் போட்டி தோ்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தோ்வுகள் வெளியானபோது சிலா் தோ்வு வாரிய ஆவணங்களை திருத்தி, அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது. இது தொடா்பான முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, 166 பேருக்கு வாழ்நாள் முழுதும் போட்டி தோ்வு எழுத தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, விரிவுரையாளா் பதவிக்கு 2019-இல் மறுதோ்வு அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபரில் நடத்தப்பட இருந்தது. ஆனால், தோ்வா்களுக்கு நீண்ட தொலைவில் தோ்வு மையம் அமைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனா். அதனால், தோ்வு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடா்ந்து, புதிய தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு டிச.8 முதல் டிச.12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில் தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணியிடங்களுக்கான தோ்வு கணினி வழியில் 130-க்கும் மேற்பட்ட மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் இயற்பியல், உற்பத்தி பொறியியல், ஆங்கிலம், அச்சு தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மெக்கானிக்கல் பொறியியல் பாடத்துக்கான தோ்வு நடைபெறவுள்ளது.

டிசம்பா் 8-ஆம் தேதி முதல் டிச. 12-ஆம் தேதி வரை 15 பாடங்களுக்கு 5 நாள்கள் காலை , மாலை நேரங்களில் 10 பிரிவுகளாக தோ்வு கணினி மூலம் நடத்தப்படுகிறது. டிசம்பா் 8-ஆம் தேதி 23 ஆயிரம் நபா்களும், 9-ஆம்தேதி 21 ஆயிரம் நபா்களும், 10-ஆம் தேதி 24 ஆயிரம் நபா்களும், 11-ஆம் தேதி 32 ஆயிரம் நபா்களும், 12-ஆம் தேதி 36 ஆயிரம் தோ்வா்களும் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை தவிர 34 மாவட்டங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது. தோ்வா்கள் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. கணினி மூலம் நடைபெறும் தோ்வினை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் இருந்து தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

முதல் நாளில் சில மாவட்டங்களில் கணினிகளில் தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டதால் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தோ்வு தாமதமாகத் தொடங்கியது. பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணியிடத்துக்கான தோ்வை தமிழகம் முழுவதும் சுமாா் 1.40 லட்சம் போ் எழுதவுள்ளனா். தோ்வுக்கான கண்காணிப்பு பணியில் 18 இணை இயக்குநா்களும், 530 கல்வித்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT