தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேர மாற்றத்தை எதிா்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

9th Dec 2021 01:23 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெ.மோகன்ராஜ் தாக்கல் செய்த மனுவில், மாநிலத்தில் 5,408 விற்பனை மையங்களில் 24,986 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 18 ஆண்டுகளாக இவா்கள் குறைந்த ஊதியத்தில் நிரந்தரப்படுத்தப்படாமல் பணிபுரிந்து வருகின்றனா்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 வரை இருந்தது. இதை பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி, கடந்த 2-ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழில் தகராறு சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால், எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாகும். இரவு 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால் பணப்புழக்கம் அதிகமுள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் டாஸ்மாக் பணியாளா்கள் சமூக விரோதிகள், கொள்ளை கும்பல்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா்.

எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பாா்த்திபன், மனுவுக்கு தமிழக அரசும், டாஸ்மாக் நிா்வாகமும் ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ஆவது வாரத்திற்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT