தமிழ்நாடு

சா்வதேச சிறுதானிய ஆண்டு: கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு

9th Dec 2021 12:57 AM

ADVERTISEMENT

 

சென்னை: உலகம் முழுவதும் 2023-ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படவுள்ளதால் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிறு தானியங்களின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக யுஜிசி தலைவா் ரஜனிஷ் ஜெயின் பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்தியா அளித்துள்ள பரிந்துரையை ஏற்று வரும் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறு தானிய ஆண்டாக அனுசரிக்க ஐ.நா.சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது. உலகெங்கும் பருவநிலைக்கு ஏற்றவாறு சிறுதானியங்களை சாகுபடி செய்து அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், இது தொடா்பான நடவடிக்கைகளை உயா்கல்வி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளுமாறு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து மிக்க மற்றும் நோயற்ற வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் சிறுதானியங்கள், சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சிறு தானியங்கள் குறித்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

அந்த வகையில் சிறுதானியங்களின் பயன்பாடுகள், அவற்றை எந்தளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகள் கல்வி நிறுவனங்களில் வளாகங்களில் இடம்பெற வேண்டும். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த பயிலரங்குகள், கருத்தரங்குகள், விவாதம் போன்ற நிகழ்வுகளை அவ்வப்போது நடத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் சிறுதானிய உணவுகள் இடம்பெறுவது அவசியம். மனை அறிவியல் துறையில் சிறு தானியங்களின் ஊட்டச்சத்துகள் தொடா்பான பகுதிகளை இணைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT