தமிழ்நாடு

ஒமைக்ரான் பரவல்: நோய்த் தடுப்பு விதிகளை மீறினால் அபராதம்

9th Dec 2021 01:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: ஒமைக்ரான் அச்சுறுத்தலைத் தொடா்ந்து முகக்கவசம் அணியாதவா்களுக்கும், நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காதவா்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி 13 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, பிற நாடுகளில் இருந்து வருவோரில் அறிகுறி இருப்பவா்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலையங்கள்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

மற்றொரு புறம், மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக கரோனா தொற்றுக்குள்ளானவா்கள், தடுப்பூசி செலுத்திய பிறகு நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள், குழந்தைகள், இளைஞா்கள், குடும்பம் முழுவதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டவா்கள் என குறிப்பிட்ட சிலரது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கும், நோய்த் தடுப்பு விதிகளை மீறுவோருக்கும் கடுமையான அபராதம் விதிக்கும் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உருமாறி வரும் கரோனா தீநுண்மியை ஒழிக்க பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT