தமிழ்நாடு

தமிழக அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்தாள் தேர்ச்சி கட்டாயம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

4th Dec 2021 03:55 PM

ADVERTISEMENT

தமிழக அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்தாள் தேர்ச்சி கட்டாயம் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மொழியை அறியாதவர்கள் தமிழக அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தெரியாத வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் தேர்வு செய்யப்படும் விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஒரு மாநிலத்தின் மொழி தெரியாதவர்கள் அரசுப் பணிகளில் பணியாற்றுவது கடினமான ஒன்றாகும். மேலும் இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் நிலையும் நடைமுறையில் இருந்து வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புகளை பெற முடியும் என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இதையும் படிக்க- பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்: கும்பல் படுகொலை குறித்து இம்ரான் கான்

ADVERTISEMENT

தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண் தேர்ச்சி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு தமிழ் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்று அறிவித்திருப்பதும் பொருத்தமானதே. இதன்மூலம், தமிழக அரசுப்பணி மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலத்தவர்கள் மற்றும்  நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்து வரும் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இந்த அரசாணையின் மூலம் தமிழ் கட்டாயம் படித்து தேர்வு பெறுவதின் மூலம் அரசுப் பணியில் அமர்த்தப்படும் நிலை  உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பணியிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் ஆகியவற்றிலும் தமிழக இளைஞர்களை முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசை, தமிழக அரசு வற்புறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : Marxist Communist Party k balakrishnan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT