தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளி தின விழா கொண்டாட்டம்

3rd Dec 2021 04:24 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பனங்காட்டாங்குடி தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்ள்ளியில் 6 முதல் 14 வயது வரையிலானவர்கள் பனங்காட்டாங்குடியிலும், 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடிதாங்கிச் சேரியிலுமாக இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது.

மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சி பள்ளி கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி, 6 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மரக்கடை கீழத்தெருவில் வாடகைக் கட்டடத்தில் இயங்கியது. அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் நிதியுதவி மற்றும் தமிழக அரசின் மானிய உதவியுடன் மேலப்பனங்காட்டங்குடி, தமிழர் தெருவில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. 

ADVERTISEMENT

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில், வட்டாட்சியர் என்.கவிதா பேசுகிறார்.

இப்பள்ளி மாநில மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் அங்கீகாரத்துடன் மன வளர்ச்சிக் குன்றிய 75 மாற்றுத்திறன் குழந்தைகள் தங்கி பயிற்சி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது.

இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி, தங்கும் வசதி, உடைகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசச் சேவையாகவே வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வியுடன், கூடைப் பின்னுதல், சாக்பீஸ், மெழுகுவர்த்தி, சாம்பிராணி போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழா கொண்டாடப்பட்டது. மேலப்பனங்காட்டாங்குடி மனோலயம் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் என்.கவிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் வரவேற்றார். நிகழ்ச்சியில், மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு, வட்டாட்சியர் மற்றும் ஆணையர் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில், ஆன்மிக ஆர்வலர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பயிற்சியாளர் சுரேஷ், மேலாளர் வினோத், மேற்பார்வையாளர்கள் கனிமொழி, ராஜா உள்ளிட்டோர் கவனித்தனர். பயிற்சியாளர் அனுராதா நன்றி கூறினார்.

Tags : World Disability Day கூத்தாநல்லூர் திருவாரூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT