தமிழ்நாடு

ஆடு திருடியதாக மாணவன் உள்ளிட்ட 3 பேர் கைது;  ஆடுகள், இருசக்கர வாகனம் பறிமுதல்

3rd Dec 2021 01:52 PM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி கேமரா உதவியோடு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆடு திருடிய 10-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3 பேரை சமயபுரம் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடிய ஆடுகளையும், ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

திருச்சி -  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பாபிள்ளை மகன் பரமசிவம் (57). ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் 3 மணிக்கு ஆடுகளை அங்கேயே மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஆடுகள் மேயும் இடத்திற்கு வந்துள்ளார் பரமசிவம். அங்கு வந்து பார்த்த போது தனது ஆடுகளில் இரண்டு ஆடுகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமசிவம் சமயபுரம் காவலர்களிடம் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

 புகாரின் பேரில் சமயபுரம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சிசிடிவி கேமராவில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ஆடுகளை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.

இதனை வைத்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, திருட்டில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது, ஆடு திருடியதனை ஒப்புக் கொண்டனர்.

ஆடு திருடியவர்கள், சமயபுரம் டோல்கேட் பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டீன்ராஜ் மகன் ஹரிஹரன் (21), கூத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சமயபுரம் நெ.1 டோல்கேட் திருவள்ளுவர் அவின்யு பகுதியைச் சேர்ந்த சிறுவன் என தெரிய வந்தது. இவர்களில் ஒரு சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறான்.

மூவர் மீது திருட்டு வழக்கு பதிந்து, கைது செய்தும், அவர்கள் திருடிச் சென்று கூத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்திருந்த இரண்டு ஆடுகளையும், திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தினையும் சமயபுரம் காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த ஆடுகளை உரிமையாளரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர்
 

Tags : theft cctv camera
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT