கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டதில், 237 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது.
நகர தலைவர் ஆர்.பி மணிகண்டன் தலைமை தாங்க, வி.கே.எஸ் ரவிக்குமார், பெயிண்டர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், கூடலூரில் கிராம நிர்வாக அலுவலகங்களில் சான்றளிக்க இடைத்தரகர் மூலம் கையூட்டு வாங்குவதை கண்டித்தும், பெயிண்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் தனியார் பெயிண்ட் கம்பெனியை கண்டித்தும், இயற்கை மரணம் அடைந்தால் இரண்டு லட்ச ரூபாய் வழங்கவும், ஓய்வு ஊதியம் ரூபாய் 3000, பெண் தொழிலாளிக்கு 55 வயதில் பென்சன் வழங்கவும் வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து கோஷமிட்டு, போராட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.ராமச்சந்திரன், சண்முகம் ஆகியோர் கண்டித்துப் பேசினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்ளிட்ட 237 பேர்களை காவல் ஆய்வாளர் கே.முத்துமணி கைது செய்து, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தார்.