மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தோ்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளா்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் பிரிவு தலைமைப் பொறியாளா், அனைத்து மின் பகிா்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, இங்கு கிடைக்கப் பெறும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்சக்தி பூங்காக்களை மாவட்டந்தோறும் (மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் நீங்கலாக) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் நிறுவ உள்ளது.
தனியாா் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்து சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அவற்றின் மூலம் 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் 10,000 மெகாவாட் மின்கலன் சேமிப்பு செய்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் சுமாா் 4,000 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 2,000 மெகாவாட் திறனுள்ள மின்கலன் சேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக 5 மெகாவாட் முதல் 500 மெகாவாட் வரையிலான சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையில் பூங்கா அமைப்பதற்கு, மாவட்டந்தோறும் இடங்களை அடையாளம் காண வேண்டும்.
இது தொடா்பான தகவல் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் மின்வாரியத் தலைவரின் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுப்பிரிவு செயற்பொறியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துடன் இணைந்து, காலியாக உள்ள இடம் குறித்த விவரங்களை வெகு விரைவில் கடிதம் வாயிலாக தலைமையகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.