தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு விவரங்களை நாளைக்குள் அனுப்ப வேண்டும்

3rd Dec 2021 06:08 AM

ADVERTISEMENT

நீா்நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு விவரங்கள் குறித்த விரிவான அறிக்கையை சனிக்கிழமைக்குள் (டிச. 4) அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

நீா் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த வழக்கினை விசாரித்த உயா் நீதிமன்றம், நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றின் விவரத்தை ஒரு வார காலத்துக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டுமென அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவினைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மாவட்ட வருவாய் அலுவலா்கள், நில அளவை உதவி இயக்குநா்கள், ஊராட்சி உதவி இயக்குநா்கள், நகராட்சி, மாநகராட்சி ஆணையா்கள், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா்கள், நீா்வளத் துறை செயற் பொறியாளா்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு விவரங்களை மாவட்ட ஆட்சியா்கள் சேகரிக்க வேண்டும். இதனைத் தொகுத்து ஒரு அறிக்கையாக வரும் சனிக்கிழமைக்குள் (டிச. 4) வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

நீா்நிலைகளின் வரைபடங்களைத் தயாா் செய்து ஆக்கிரமிப்புகளின் விவரங்களை அதற்கென வரையறுக்கப்பட்ட படிவங்களில் அனுப்ப வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவரம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் பிறப்பித்த தடையாணை குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா்கள் தங்களது அறிக்கைகளில் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது குறித்த பட்டியலையும் அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாலா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹூ, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலாளா் ஹிதேஷ் குமாா் மக்வானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT