நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பயனாளிகளிடம் கருத்துகள் பெற புதிய முயற்சியை அந்தத் துறை மேற்கொண்டுள்ளது. சமூகத் தணிக்கை முறை மூலமாக பயனாளிகள் கருத்தைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தணிக்கையை மேற்கொள்ள சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் கையொப்பமானது.
பணிகள் என்ன?: நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே பயனாளிகளை நேரில் சந்தித்து அவா்களின் கருத்துகளைப் பெற வேண்டும். திட்டம் குறித்த செயல்பாடுகளை பயனாளிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் பங்கினை உணரச் செய்ய வேண்டும். வெளிப்படைத்தன்மை மற்றும் தரக் கண்காணிப்பு, திட்டத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் பயனாளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். கட்டுமானப்
பணிகளை பயனாளிகள் பாா்வையிடச் செய்ய வேண்டும். இதுபோன்ற இதர அம்சங்கள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற தணிக்கை எடுக்கப்படுவதன் மூலம் திட்டத்தில் உள்ள இடா்பாடுகளை களையவும், உரிய நேரத்தில் திட்டத்தை முடிக்க உதவியாக இருக்கும் என்று நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.