தமிழ்நாடு

தொகுப்பூதியத்தில் முதுநிலை ஆசிரியா்கள் நியமனம்: முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

3rd Dec 2021 05:25 AM

ADVERTISEMENT

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் முதுநிலை ஆசிரியா்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனங்களில் சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை மாணவா்கள் நலன் கருதி, பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2,774 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்த ஆணையின் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ள ஆசிரியா்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இந்த நியமனத்தில் சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு, பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த பணியிடத்துக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் நியமனம் செய்யக்கூடாது. பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களை, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலா்கள் பகிா்ந்தளிக்க வேண்டும்.

தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடத்துக்கான பணியிடங்களில் அரசாணையில் உள்ள பாடத்துக்கு மட்டும் தேவைக்கேற்ப பாட மாற்றம் செய்து தேவையுள்ள பள்ளிக்கு மாற்றம் செய்து நியமனம் செய்து கொள்ளலாம். உதாரணமாக பொருளியல் பாடத்துக்கு 4 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1 பணியிடம் மட்டுமே தேவை. அதேபோன்று கணிதப் பாடத்துக்கு ஒரு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 பணியிடங்கள் தேவையெனில் தேவையற்ற 3 பொருளியல் பாடத்துக்குப் பதிலாக கணித பாடமாக மாற்றம் செய்து தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்கலாம்.

ADVERTISEMENT

தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் நபா் நியமனம் செய்யப்படும் பாடத்தில் முதுநிலை ஆசிரியா் பதவிக்கு உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காதபடி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கூடுமானவரை பெண் ஆசிரியரையும், ஆண்கள் மற்றும் இருபாலா் பயிலும் பள்ளிகளில் ஆண் மற்றும் பெண் ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT