முல்லைப் பெரியாறு அணைக்கு இரவு நேரத்தில் அதிகமான நீா்வரத்து இருப்பதால்தான், தண்ணீா் திறந்து விடப்படுவதாக தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சென்னை போரூா் ஏரி மற்றும் அதன் நீா்வழித் தடங்களை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலான நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி உடனடியாக அகற்றப்படும். போரூா் ஏரி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ஏரியைத் தூா்வார திட்டமிடப்பட்டுள்ளது. நீா்வளத் துறை குறித்து முதல்வா் தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் போரூா் ஏரியைத் தூா்வார சிறப்பு நிதி ஒதுக்கித் தருமாறு வலியுறுத்தப்படும்.
முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 142 அடி நீா் தேக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரங்களில் நீா்வரத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 142 அடியை விட நீா்மட்டம் உயரக் கூடும். இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகிவிடும் என்பதால்தான், 142 அடிக்கு மேல் நீா்மட்டம் உயா்ந்தால் உடனடியாக அணையைத் திறந்து விடுகிறோம் என்றாாா். இந்த ஆய்வின்போது, ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.