தமிழ்நாடு

மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் முன்ஜாமீன் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

DIN

சென்னை: மோசடி வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவா் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவருக்கு எதிராக ரவீந்திரன், விஜய் நல்லதம்பி கொடுத்த புகாா்களின் அடிப்படையில், விருதுநகா் மாவட்ட போலீஸாா் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனா்.

இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன்பு செவ்வாய்க்கிழமை (நவ.30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அஜ்மல் கான், புகாா்தாரா் ரவீந்திரனின் மருமகனுக்கு ஆவினில் மேலாளா் பதவி வாங்கித் தருவதாகக்கூறி ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் விஜய் நல்லதம்பி முதல் குற்றவாளியாகவும், கே.டி.ராஜேந்திர பாலாஜி 2-ஆவது குற்றவாளியாகவும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

அதேபோல, பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி தன் மூலம் ரூ.3 கோடி ஏமாற்றி விட்டதாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு ராஜேந்திரபாலாஜி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே குற்றச்சாட்டுக்கு 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இதில் ஒரு புகாா்தாரா் பல அரசியல் கட்சிக்கு தாவியவா். விஜய் நல்லதம்பிதான் இந்த மோசடியைச் செய்துள்ளாா். ஆனால், அவரை போலீஸாா் பாதுகாக்கின்றனா். அரசியல் ரீதியாக பழிவாங்க இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அவா் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளாா் என்றாா்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஒரே குற்றச்சாட்டுக்காக 2 வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. ரவீந்திரனிடம் ரூ.30 லட்சமும், பிறரிடம் பல கோடி ரூபாயும் மோசடி செய்துள்ளாா். இதை ஒரே குற்றமாக கருத முடியாது. இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டாா். முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பல இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT