தமிழ்நாடு

நெல் சேமிப்புக் கிடங்கில் வெள்ளம்!

1st Dec 2021 03:48 AM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் மழைநீர் குளம்போல தேங்கியதால் 1,500 நெல் மூட்டைகள் சேதமடைந்தன. மழைநீரை வெளியேற்றும்  பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே டி. மணல்மேடு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்த சேமிப்புக் கிடங்கில் சீர்காழி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு, பிறகு அரவைக்காக எருக்கூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நிகழாண்டு, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவைப் பருவ நெல்  4,752 டன் (சுமார் 70 ஆயிரம் மூட்டைகள்) இந்த சேமிப்புக் கிடங்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மழைநீர் புகுந்து குளம்போல தேங்கியது. இதனால், சுமார் 1,500 நெல் மூட்டைகள் நனைந்தும், நீரில் மூழ்கியும் சேதமடைந்துள்ளன. பல மூட்டைகளிலிருந்து நெல்மணிகள் வெளியே கொட்டிக்கிடக்கின்றன. சில மூட்டைகளில் நெல்மணிகள் முளைத்துள்ளன. சேமிப்புக் கிடங்கு முழுவதும் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) முத்தையன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியோடு பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மோட்டார் மூலமும் தண்ணீரை வெளியேற்றும் முயற்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT