தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 107: கே.ஆ‌ர்.​க‌ல்​யா​ண​ரா​ம‌ய்​ய‌ர்

1st Dec 2021 05:14 AM | -த.ஸ்டாலின் குணசேகரன்

ADVERTISEMENT


ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள குட்டியம் எனும் சிற்றூரில் 7-5-1907-இல் பிறந்தார் கல்யாணராமய்யர்.
1921-இல் காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்திருந்தபோது நேரில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். 1927-இல் சுப்பிரமணிய சிவா ஆற்றிய உரை ஐயரைக் காந்தம்போல கவர்ந்திழுத்தது.
1929-இல் ஆக்கூர் அனந்தாச்சாரியாரும் ஜமதக்னியும் ஓராண்டு சிறைத் தண்டனையை முடித்துக்கொண்டு வாலாஜா வந்தனர். அவர்களுடனான தொடர்பு ஐயரின் போராட்ட உணர்வை மேம்படுத்தியது. ஆசிரியர் பணியைத் துறந்தார்.
1930-இல் உப்பு சத்தியாகிரக அறப்போராளிகளுக்கான பயிற்சி முகாம் ஆற்காட்டில் ஐயர் தலைமையில் நடைபெற்றது. 1932-இல் காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி தடையைமீறி ஊர்வலம் நடத்தினார். கண்டன உரையாற்றினார். கைது செய்யப்பட்டார். ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பிராமணர்களுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறும் வழக்கமிருந்தது. சகபோராளி அண்ணல் தங்கோவும் ஐயரும் சேர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 
ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளர் மற்றும் தலைவராக சுமார் 25 ஆண்டுகளுக்குமேல் பொறுப்பிலிருந்தார். மது ஒழிப்பு தொடர்பாக ராஜாஜியுடன் வட ஆற்காடு மாவட்டத்தில் 200 கிராமங்களுக்குச் சென்று 500 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். "மதுவிலக்கின் மாண்பு', "மதுபானம் ஒழிக' ஆகிய சிறு நூல்களை எழுதி வெளியிட்டார்.
1942 "வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை பம்பாய் கூட்டத்தில் நிறைவேற்றிய பின்னர் காந்தியடிகள் உள்பட அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கைதுக்குத் தப்பி ரயிலில் தமிழகம் வந்த காமராஜர் அரக்கோணத்தில் இறங்கி ராணிப்பேட்டையிலுள்ள கல்யாணராமய்யர் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு ரகசியமாக வந்தார். காமராஜரை தலைமறைவாக வைத்திருந்ததோடு அவருடன் பிற மாவட்டங்களுக்கும் சென்று போராட்ட அறிக்கையை ரகசியமாக விநியோகம் செய்தார். வீடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார்.
1936-லிருந்து தொழிற்சங்கத் தலைவராக விளங்கி தொழிலாளர்களை விடுதலைப் போராட்ட உணர்வாளர்களாக உருவெடுக்க வைத்தார். "தினமணி' இதழின் நிருபர், கட்டுரையாளர் என தனது இதழியல் பயணத்தை தொடங்கிய ஐயர் பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பரிணாமம் பெற்றார். "ஜெய் பாரத்' இதழை நடத்தினார்.
1936-1938-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஜில்லா போர்டு உறுப்பினராக இருந்துள்ளார். 
1941-இல் காந்தியடிகளின் தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது டி.எஸ்.எஸ்.ராஜன், கல்யாணராமய்யர் ஆகியோர் அடிகளுடன் பயணித்து நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தனர்.
வாலாஜாபேட்டையில் "தீனபந்து ஆசிரமம்' என்ற ஏழைக் குழந்தைகள் தங்கிப் படிக்கும் இல்லத்தைத் தொடங்கி தேசியத் தலைவர்களின் கவனத்தைப் பெறும் அளவுக்கு உயிரோட்டமான 
சேவை புரிந்தார். 
காந்தி, காங்கிரஸ் இரண்டையும் தாரக மந்திரமாக ஏற்றிருந்த இவர் 24-3-1984-இல் மறைந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT