தமிழ்நாடு

வாழப்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

27th Aug 2021 11:03 AM

ADVERTISEMENT

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 310 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லிட்டர் எரிசாராயத்தை, சேலம் மண்டல மத்திய புலனாய்வு குழு காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், மகாராஷ்டிரத்தில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து கள்ளச் சாராயமாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மண்டல மத்திய புலனாய்வுக் குழு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சேலம் மண்டல மத்திய புலனாய்வுக் குழு காவல் ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான காவல்துறையினர், வியாழக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில்  வாழப்பாடி அருகிலுள்ள முத்தம்பட்டி சங்ககிரியார் தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

ADVERTISEMENT

இச்சோதனையில், அங்கிருந்த ஒரு குடோனில், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 310 கேன்களில், 10850  எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தை மீட்ட, மத்திய புலனாய்வுக்குழு காவல்துறையினர், மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து, வாழப்பாடி அருகே  பதுக்கி வைத்திருந்த சேலம் அரியானூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் தமிழரசு(41) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தட்சன்விளை வீடு பகுதியைச் சேர்ந்த நேசமணி மகன் கனகராஜ் (49) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் சேலம் இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினரிடம், மத்திய புலனாய்வு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைத்தனர்.

வாழப்பாடி அருகே 10850 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : salem alcohol
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT