தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 2-க்கு ஒத்திவைப்பு

27th Aug 2021 01:13 PM

ADVERTISEMENT

உதகை: கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கை செப்டம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இவ்வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது கொடநாடு எஸ்டேட் மேலாளர்  நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின்வாரிய கோத்தகிரி உதவி பொறியாளரிடம் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. 

 

ADVERTISEMENT

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக சயன், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார். 

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயன் மற்றும் கார் விபத்தில  உயிரிந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, கொடநாடு வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இதனால், அனைவரும் இந்த வழக்கு விசாரணைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். 

இந்நிலையில், கொடநாடு  எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயன் மட்டுமே ஆஜராகியிருந்தார். வாளையாறு மனோஜை் போலீஸார் ஆஜர்படுத்தவில்லை.

அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். அதிமுக சார்பில் வழக்குரைஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ், என்.சுரேஷ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும், அரசு வழக்குரைஞர்கள் இவ்வழக்கில் ‛புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை’ என்றனர். அதேபோல சாட்சி அனுபவ் ரவி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆனந்த கிருஷ்ணன், அனுபவ் ரவியிடம் மறு விசாரணை செய்யக்கூடாது என தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, அந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை விசாரணை நடத்த கூடாது’ என்றார்.  இதையடுத்து மாவட்ட
நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும் போது, ‛போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை முடித்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு கால அவகாசம் தேவை என கோரினோம். நீதிபதி விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். அன்றைய தினம் முதல், சாட்சிகளான கொடநாடு மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின்சார வாரிய கோத்தகிரி உதவி பொறியாளர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும்’ என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT