தமிழ்நாடு

நடிகை மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

27th Aug 2021 04:55 PM

ADVERTISEMENT

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவலை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 
தமிழ் திரைப்பட நடிகை மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு விடியோவை பதிவிட்டாா். அதில் குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா்கள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தாா். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. 
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா். அப்புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவினா் மீரா மிதுன் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். 

இதையும் படிக்க- புதுவையில் 100% தடுப்பூசி போடப்பட்ட 41 கிராமங்கள்: தமிழிசை

தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸாா் கேரள மாநிலம் ஆலப்புழையில் கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனா். இதேபோல மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த அம்பத்தூரைச் சோ்ந்த அவரது நண்பா் அபிஷேக்கை 15-ஆம் தேதி கைது செய்தனா். இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

Tags : Meera Mithun
ADVERTISEMENT
ADVERTISEMENT