தமிழ்நாடு

க்யூஆர் கோட் பயன்படுத்தும் நிறுவன உரிமையாளர்கள் கவனத்துக்கு..

27th Aug 2021 03:38 PM

ADVERTISEMENT


தங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களில் க்யூஆர் கோட் பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு ஈரோடு காவல்துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலையில் சிறிய கடைகளின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த க்யூஆர் கோடை மாற்றி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.

அதில், உங்கள் நிறுவனத்தில் ஒட்டப்பட்டிருப்பது உங்களுடைய க்யூஆர் கோட் தானா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் படிக்க: இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்

சென்னையை அடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சிறிய கடைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் க்யூஆர் கோட்டை மாற்றி, தனது நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்காக, தான் பிரத்யேகமாக உருவாக்கிய க்யூஆர் கோடுகளை ஒட்டி பல லட்சம் மோசடி செய்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் போது, அவருக்கு இந்த க்யூஆர் கோடுகள் கிடைத்துள்ளன. அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதும், அவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

 

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கடைகளுக்கு வெளியே ஒட்டப்படிருக்கும் க்யூ ஆர் கோடுகளை, இரவு நேரங்களில் அங்குச் சென்று மாற்றி ஒட்டிவிட்டு வந்து விடுவார். பல வணிகர்கள், தங்களது கடைகளில் சிறிய அளவில் பொருள்கள் வாங்குவோர் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் போது அதை சரியாகக் கவனிக்காமல் விட்டுவிடுவது இவருக்கு சாதகமாக இருந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சி. வல்லரசு, போன்பே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது, பழைய மகாபலிபுரம் பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று போன்பே மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் க்யூஆர் கோடைப் பயன்படுத்துமாறு கடைக்காரர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அதில் சிலர் ஒப்புக் கொண்டு கடைகளில் க்யூஆர் கோடை ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வல்லரசு வேலையில் இருந்து விலகியுள்ளார். ஆனால் அவரிடம் சுமார் 460 க்யூஆர் கோடுகள் இருந்துள்ளன. அப்போது அவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதன்படி, தனது நண்பர்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட க்யூஆர் கோடுகளை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கடைகளுக்கு வெளியே ஒட்டப்பட்டிருக்கும் க்யூஆர் கோடுகளுக்கு மேல் ஒட்டிவிட்டு வந்துள்ளார்.

நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் |  கரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ்-ஆப்பில் பெறுவது எப்படி? முழு விவரம்

இரவு நேரங்களில் வல்லரசு இதனைச் செய்து வந்ததால் கடைக்காரர்களுக்கும் இதுபற்றி தெரியவில்லை. சிறிய கடைகள் என்பதால், ரூ.20, 10 என வரும் தொகையை தங்களது வங்கிக் கணக்கில் சேர்கிறதா என்ற கடைக்காரர்களும் கவனிக்காமல் இருந்துள்ளனர். ஆனால், புத்திசாலித்தனமாக, இந்த க்யூஆர் கோடை ஒரு சில நாள்களில் வல்லரசு நீக்கிவிட்டு, வேறொரு கடைகளில் ஒட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வல்லரசு மற்றும் அவரது நண்பர் ராபர்ட் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்லரசுவின் நண்பர்கள் சிலருக்கு இவர் செய்த மோசடி குறித்துத் தெரியாமலேயே, அவர்களது வங்கிக் கணக்குகள் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

எனவேதான் காவல்துறை தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே க்யூஆர் பயன்படுத்தும் உரிமையாளர்கள் கவனமுடன் செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT