தமிழ்நாடு

அன்பிற்கும் ஈகைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம்: முதல்வர் ஸ்டாலின்

20th Aug 2021 02:50 PM

ADVERTISEMENT

சென்னை: அன்பிற்கும், ஈகைக்கும் அடையாளமாக விளங்குவது ஓணம் பண்டிகை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், கேரள மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓணம் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

சகோதரத்துவம் - சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்

கேரள மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எனப்படும் ஓணம் பண்டிகை - ஆவணி மாதம் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீரமும், ஈரமும் மிகுந்த மாவலி சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வணங்கி வரவேற்கும் நாளாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவு பரிமாற்றங்கள் ஆகியவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள அன்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் அற்புதமான பண்டிகைத் திருநாள் இது. இளைஞர்கள் எழுச்சியுடன் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியமிகு படகுப்போட்டியை 10 நாட்கள் படு விமரிசையாக நடத்தி - இறுதி நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக - எல்லோரும் மகிழத்தக்க வகையில் நிறைவடைகிறது.

தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்தவர் கருணாநிதி. எனவேதான் ஓணம் பண்டிகையை அவர்கள் மன நிறைவுடன் கொண்டாடுவதற்கு வசதியாக எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து 2006-ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று சென்னை மாநகரத்திற்கும் “உள்ளூர் விடுமுறை” என்று 14.8.2007 அன்று அறிவித்து - தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதிக்கும் முதலமைச்சராகத் திகழ்ந்தார்.

அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் - திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும் - கேரள மக்கள் அனைவரும் - நலமிகு வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று மீண்டும் “ஓணம் திருநாள்” வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT