தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் குவிந்த பக்தர்கள்!

20th Aug 2021 10:40 AM

ADVERTISEMENT

 

திருத்தணி: வரலட்சுமி நோன்பு மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் முருகன் மலை கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்கள் மலைப்பாதை அருகே அதிகளவில் குவிந்தனர். மேலும் புதுமணத்தம்பதிகள் மலை கோயிலுக்கு செல்வதற்கு குவிந்தனர்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வரும் 23 ஆம் தேதி வரை வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது.

அந்த வகையில் திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. எனவே மலைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளும் பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இந்நிலையில்,வெள்ளிக்கிழமை திருமண முகூர்த்த நாள் மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதால் காலையிலேயே அதிக அளவில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்காக மலைப்பாதை அருகே வந்தனர். 

கோயில் ஊழியர்கள் மேலே செல்வதற்கு தடுத்து நிறுத்தியதால் பக்தர்கள் அங்குள்ள வேல் அருகில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். புதுமண தம்பதிகளும் கோயிலுக்கு செல்ல முடியாமல் அருகே வழிபட்டு சென்றனர். சிலர் வேல் முன்பே புதுமண தம்பதிகள் திருமண முகூர்த்தம் நடத்திக் கொண்டனர். ஒரு சில தம்பதியினர் வேல் அருகே தாலியை கட்டி வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அருகே குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோயிலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என கோயில் ஊழியர்கள் பக்தர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர் இதனால் புதுமண தம்பதிகளும் பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT