தமிழ்நாடு

எய்ம்ஸ் திட்டப்பணிகள் நடைபெறவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

12th Aug 2021 04:08 AM

ADVERTISEMENT

 

கரூர்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டத்தில் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
கரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதன்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,665 ஆகவும், கரூர் மாவட்டத்தில் 527-ஆகவும் இருந்தது.
முதல்வரின் சரியான நடவடிக்கையால் மாநில அளவில் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது.  இதுபோல, கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியால், தற்போது மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16- ஆகக் குறைந்துள்ளது. விரைவில் தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் உருவாகும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைத் திட்டப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.  மருத்துவமனை தொடர்பாக தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
2006-இல் தமிழக முதல்வராக மு. கருணாநிதி இருந்த போது, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கை வகுக்கப்பட்டது.  பின்னர் ஆட்சி மாற்றத்தினால் அவை நடைபெறாமல் இருந்தது.
பின்னர், கடந்த ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கப்பட்டன.  பிரதமரை தமிழக முதல்வர் அண்மையில் நேரில் சந்தித்த போது, 11 மருத்துவக் கல்லூரிகளையும் உடனடியாக ஆய்வு செய்து, நிகழாண்டிலேயே சேர்க்கை நடத்திட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதுவரை 9 மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கான கலந்தாய்வு இடைத்தரகர் இல்லாமல், ஒளிவு மறைவில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான மருத்துவர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.
முன்னதாக,  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியுடன் இணைந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் ஆட்சியர் த. பிரபுசங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குளித்தலை இரா. மாணிக்கம், அரவக்குறிச்சி ஆர். இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க. சிவகாமசுந்தரி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT