தமிழ்நாடு

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது

11th Aug 2021 12:03 PM

ADVERTISEMENT


திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே  பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்(25). இவரது நண்பர்களான கண்ணபிரான், முருகன், சீனிவாசன், பாலாஜி ஆகியோரிடம், அதேபகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், வெங்கடேசன் பாலாஜி, அரவிந்த், ராகுல் ஆகியோர் தங்களுக்கு ரயில்வே துறையில் நன்கு அறிமுகமான உயரதிகாரிகள் உள்ளனர் என கூறியுள்ளனர். அதனால் அவர்களிடம் கூறி  உங்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தலா ரூ.2.50 லட்சம் வீதம் பணத்தைப் பெற்றுள்ளனர். 

அதையடுத்து பணம் கொடுத்தவர்களுக்கு போலியான பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். இதை உண்மை என நம்பவைத்து ஏமாற்றி சுமார் 40 பேரிடம் ரூ.2 கோடி வரை பணத்தைப் பெற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில் பணி நியமன ஆணை போலி என தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த சத்யராஜ் மற்றும் கண்ணபிரான், முருகன், சீனிவாசன், பாலாஜி ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கு பதிவு தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆந்திரம் மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(53), அரக்கோணத்தைச் சேர்நத பி.பாலாஜி(27) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆகார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய சகோதரர்களான அரவிந்த் (24) மற்றும் ராகுல் (25) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT