தமிழ்நாடு

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி: நைஜீரிய இளைஞர் கைது

8th Aug 2021 06:21 PM

ADVERTISEMENT

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி செய்ததில் நைஜீரிய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் வெங்கடாஜலபதி(43). வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், கரோனா தொற்று காரணமாக தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

இந்நிலையில் முகநூல் மூலம் அறிமுகமான நபரிடம் கனடா நாட்டில் வேலை வாங்குவதற்காக ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்தது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரனிடம் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்று கொண்டு, தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொள்ள காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தனிப்படை போலீசார், வெங்கடாஜலபதியின் முகநூல் கணக்கு, செல்லிடப்பேசி எண் மற்றும் ஆன்-லைன் பணப்பரிவர்த்தனை தொடர்புகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் வசித்து வரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த யூச்சன்ன கிறிஸ்டியன் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பெருந்துறை சென்ற திண்டுக்கல் தனிப் படை போலீசார் யூச்சன்ன கிறிஸ்டியனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது: முகநூல் வழியாக நேகா என்ற பெண்ணுடன் வெங்கடாஜலபதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கரோனா சூழலால் ஆசிரியர் பணி இல்லாமல் வீட்டில் இருப்பதாக வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு யூச்சன்ன கிறிஸ்டியன் என்பவரை தொடர்புகொள்ளுமாறும் நேகா தெரிவித்துள்ளார். அதன்பேரில், வெங்கடாஜலபதி, யுச்சன்ன கிறிஸ்டியனை தொடர்பு கொண்டபோது, கடவுச் சீட்டு, நுழைவு இசைவு(விசா), மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றுக்காக ரூ.4 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார். வெங்கடாஜலபதியும் பல தவணைகளில், ஆன்-லைன் பரிவர்த்தனை மூலம் ரூ. 4 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

மேலும் ரூ. 2 லட்சம் கேட்டதால் சந்தேகமடைந்த வெங்கடாஜலபதி, சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அவரது செல்லிடப்பேசி தொடர்புகள், பணப் பரிவர்த்தனை விவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்டது யூச்சன்ன கிறிஸ்டியன்(35) என்பது தெரிய வந்தது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிவலசு பகுதியில் வசித்து வருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT