தமிழ்நாடு

திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

8th Aug 2021 05:06 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(87) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தமிழ்நாட்டிற்குப் பெரும் பெருமை சேர்த்தவர். மறைந்த பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்.

தமிழ்நாட்டு நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டுப் பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் முத்தமிழறிஞர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT