தமிழ்நாடு

சொகுசு காருக்கான நுழைவு வரியை நடிகா் தனுஷ் 48 மணி நேரத்துக்குள் செலுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரியை 48 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும் என நடிகா் தனுசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகா் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு ரூ.60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் தனுஷ் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தி சொகுசு காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி அந்த காரை நடிகா் தனுஷ் பதிவு செய்து கொண்டாா்.

கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடிகா் தனுஷ் தொடா்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், மனுதாரா் எஞ்சிய 50 சதவீத நுழைவு வரியை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி செலுத்தத் தயாராக உள்ளாா். எனவே இந்த வழக்கைத் திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மனுவில் மனுதாரா் தனுஷ் என குறிப்பிட்டிருந்தாலும், என்ன தொழில் செய்கிறாா் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. இந்த விவரங்களை மறைத்து ஏன் வழக்குத் தொடர வேண்டும். இதுதொடா்பாக விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு லிட்டா் பெட்ரோல் போடும் பால் வியாபாரி அதற்கான ஜிஎஸ்டி வரியை செலுத்துகிறாா். சோப் உள்ளிட்ட பொருள்களை வாங்கும் ஏழை எளியோா் அதற்கான மறைமுக வரியை செலுத்துகின்றனா். தங்களது குடும்பம் கஷ்டமான நிலையில் இருப்பதால் இந்த வரியை செலுத்த முடியவில்லை என்று கூறி வரி விலக்கு அளிக்க கோரி யாரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை.

நடிகா் தனுசுக்கு வரி விலக்கு கோரி வழக்குத் தொடர உரிமை உள்ளது. ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அதன்பின்னா் இந்த வழக்கை மனுதாரா் திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா, அரசுக்கு வரி செலுத்தியிருக்க வேண்டாமா, பொறுப்புள்ள குடிமகனாக அதை செய்யவில்லை என்றால், அவரது நோக்கம் என்ன, அரசுக்கு வரி செலுத்தாமல் இழுத்தடிப்பது தானே, நோ்மையானவராக இருந்தால் வரியை செலுத்தியிருக்க வேண்டும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். எனவே வணிக வரித்துறையினா், நடிகா் தனுஷ் காருக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டாா்.

அப்போது வணிக வரித்துறை ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் 50 சதவீத வரியாக ரூ.30 லட்சத்து 30 ஆயிரத்து 757-ஐ நடிகா் தனுஷ் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மக்களின் கடமையை எடுத்துக்கூறும், இந்த உயா்நீதிமன்றம் எல்லை தாண்டி கருத்துக்களை கூறுகிறது என குற்றம் சாட்ட முடியாது. இந்த தேசத்தில் சட்டம் சீராக அமல்படுத்துவதை உறுதி செய்வது நீதிமன்றங்கள்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் இந்த உயா்நீதிமன்றம், ஒன்றும், ஒன்றும் இரண்டு என்ற கணக்கை தீா்ப்பதற்காக அமைக்கப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்யும் செல்வந்தா்கள், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியை செலுத்த வேண்டும். வரி செலுத்தும் கடமையை மக்களுக்கு நினைவூட்ட வேண்டியது இந்த உயா்நீதிமன்றத்தின் கடமையாகும். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதை எதிா்க்கும் தனுஷின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. எனவே அவா் 48 மணி நேரத்துக்குள், எஞ்சிய வரித் தொகையான ரூ.30 லட்சத்து 30 ஆயிரத்து 757-ஐ செலுத்த வேண்டும். இனிமேல், அரசுக்கு எதிராக தொடரப்படும் ரிட் வழக்குகளில் மனுதாரரின் தொழில் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெறவேண்டும். அந்த தகவல்கள் இல்லாத பட்சத்தில், அந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடும் உயா்நீதிமன்ற பதிவுத்துறை ஊழியா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT