தமிழ்நாடு

கேள்விக்குறியாகிறது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

DIN

நாகப்பட்டினம்: கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வார இறுதி நாள்களில் பொதுமக்களின் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இரண்டாம் ஆண்டாக  நிகழாண்டிலும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கேள்விக்குறியாகியுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், உலக புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இப்பேராலயத்தின் முக்கிய விழாவான ஆண்டுப் பெருவிழா, ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி மாதா பிறந்த நாள் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவடையும்.

ஆண்டுப் பெருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். எனினும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் அலங்கார தேர் பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

இதில், குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணி வருவது வழக்கம். பாத யாத்திரை பக்தர்களின் வருகை காரணமாக,  கொடியேற்றம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே வேளாங்கண்ணி பக்தர்களால் களைகட்டியிருக்கும். 

அதேபோல, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்ட வீதிகளும் வேளாங்கண்ணி பாத யாத்திரை பக்தர்களால் பரபரப்பாக இருக்கும்.  பாத யாத்திரை பக்தர்களுக்காக 4 மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில இடங்களில் அன்னதானமும் நடைபெறும். ஆங்காங்கே சாலையோர தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, குளிர்பானங்கள், பழ வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடங்கியதன் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் மார்ச் 20-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயத்தில் பொதுமக்களின் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி விலக்கிக் கொண்டது. இருப்பினும், தமிழக அரசு விதித்திருந்த வழிபாடுகளுக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடித்தது. இதனால், 2020-ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடைபெற்றது. 

தமிழக அரசின் தடை விலகியதையடுத்து, நாகை மாவட்டத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்த காரணத்தால், வேளாங்கண்ணி பேராலயத்தில் பொதுமக்கள்  வழிபாட்டுக்கான தடையை மட்டும் (பெருவிழா நிறைவடையும் வரை) செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், வேளாங்கண்ணி பேராலயத்தின் 2020- ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்களின்றி நடைபெற்றது. 

கரோனா பரவலைத் தடுக்க இந்தத் தடை நடவடிக்கை மிக அவசியமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தாலும், ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க இயலாதது பக்தர்களுக்கு வருத்தத்தை அளித்தது. பேராலய இணையதளத்தில் ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, பக்தர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளித்தது.

இந்த நிலையில், இரண்டாம் ஆண்டாக நிகழாண்டிலும் கரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கேள்விக் குறியாகி உள்ளது. கரோனா மூன்றாவது அலை அதிகளவில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாக உள்ள நாகை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகவே கரோனா நோய்த் தொற்றுப் பரவல் உயர்ந்து வருகிறது.

இதனால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் (ஆக. 6 முதல்) ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்களின் தரிசனம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தடை விதித்து நாகை மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும், ஆடிப்பூரத்தையொட்டி ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் இந்து திருக்கோயில்களில் பொதுமக்களின் தரிசனத்துக்கும்,  வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதற்கும் தடை விதிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடங்கவுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வார இறுதி நாள்கள் வழிபாட்டுக்கான தடை உத்தரவுப்படி, நிகழாண்டிலும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது கேள்விக் குறியாகியுள்ளது.

இதுகுறித்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளாரிடம் கேட்டபோது, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் தரிசனத்துக்காக புதிதாக வெளியிட்டுள்ள தடை உத்தரவுப்படி, நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது சந்தேகம்தான். இருப்பினும், தற்போது இறுதி முடிவை வெளியிட இயலாது. பேராலய ஆண்டுப் பெருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 6) நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில், ஆண்டுப் பெருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT