தமிழ்நாடு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கும் திருப்புமுனையாக மாறிய அப்ரூவரின் வாக்குமூலமும்

4th Aug 2021 01:16 PM

ADVERTISEMENT

 

கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐயப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறிய நிலையில், மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு விசாரணையில், மிக முக்கிய திருப்பமாக இருந்தது, கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறியதும்தான். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மிக முக்கிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்த நிலையில், அரசு தரப்பு சாட்சியத்தின் வாக்குமூலமே குற்றத்தை நிரூபிக்க பேருதவியாக இருந்துள்ளது. 

ADVERTISEMENT

அதுமட்டுமல்ல, தன் மீதான தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து மரணமடைவதற்கு முன்பு, மருத்துவர் சுப்பையாவே, காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்குரைஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேரை கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல மருத்துவர் சுப்பையா. சென்னை அரசு மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பையா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இதற்காக சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் ஏற வந்த சுப்பையாவை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.

இந்தக் காட்சி அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பையா, 9 நாள்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

தொடக்கப் புள்ளியாக அமைந்த டாக்டரின் வாக்குமூலம்..

கூலிப்படையினரால் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சுப்பையா, 22ஆம் தேதி உயிரிழப்பதற்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ரூ.15 கோடி சொத்து தொடர்பாக தனக்கும், தனது ஒன்றுவிட்ட சகோதரர் பொன்னுசாமிக்கும் (60) பிரச்னை உள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.  இந்த புள்ளியிலிருந்துதான், சென்னை தனிப்படை காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். 

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அபிராமபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் காணிமடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே அஞ்சுகிராமத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்துப் பிரச்னை இருப்பதும், இப்பிரச்னைத் தொடர்பாக நீதிமன்றத்தில்த தொடரப்பட்ட ஒரு வழக்கில் சுப்பையாவுக்கு சாதகமான தீர்ப்பு அண்மையில் வந்ததால், ஆத்திரமடைந்த பொன்னுசாமி குடும்பத்தினரே சுப்பையாவை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர், பொன்னுசாமி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் பொன்னுசாமியின் மகன் பாசில், மற்றொரு மகன் போரீஸ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பொன்னுசாமியும் அவரது மனைவி மேரிபுஷ்பமும் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூலிப்படையினர் மூலம் அவர்கள் டாக்டர் சுப்பையாவை கொலை செய்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறினர். கேமராவில் பதிவான காட்சியில் ஆள்களின் அடையாளம் சரியாகத் தெரியாததால், வழக்கில் துப்பு துலக்குவதில் பிரச்னை ஏற்பட்டது.

ஆனால், தனிப்படையினரின் தீவிர விசாரணையின் மூலம் கொலையில் நேரடியாக தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பணகுடி அருகே தண்டையார்குளத்தைச் முருகன், திருக்குறுங்குடியைச் சேர்ந்த அய்யப்பன், ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த செல்வபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்ப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

இச்சம்பவத்தில் பாசிலின் நண்பர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வில்லியம்ஸ் மூலம் டாக்டர் ஜேம்ஸ் அறிமுகம் கிடைத்துள்ளது. ஜேம்ஸிடம், பாசில் தங்களுக்கும் சுப்பையாவுக்கும் சொத்துப் பிரச்னை இருப்பது குறித்தும், சுப்பையாவை கொலை செய்துவிட்டால் அந்த சொத்து தங்களுக்கு கிடைக்கும் என்றும் கூறினாராம்.

அந்த பிரச்னையை முடித்துக் கொடுத்தால் அந்த சொத்தில் கிடைக்கும் பாதி பணத்தை தருவதாக பாசில், ஜேம்ஸிடம் கூறினாராம். அதற்கு சம்மதித்த ஜேம்ஸ் தனக்கு தெரிந்த முருகன், அய்யப்பன், செல்வபிரகாஷ் ஆகிய 3 பேர் மூலம் டாக்டர் சுப்பையாவை கொலை செய்வதாகவும், அதற்கு அவர்களுக்கு கூலியாக ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறினராம்.

அதற்கு பாசில் ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரே, கூலிப்படையினர் சுப்பையாவின் நடமாட்டத்தை நோட்டமிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

சுப்பையாவை வெட்டி விட்டு அந்த கும்பல் மும்பைக்கு தப்பியோயிடிருப்பதும், பின்னர் சில நாள்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வந்திருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட டாக்டர் ஜேம்ஸ், திருநெல்வேலி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். அதோடு வள்ளியூரில் சொந்தமாக மருத்துவமனையும் நடத்தி வருகிறார். மேலும் ஜேம்ஸ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் மூலம் வெளியே வந்த பொன்னுசாமி குடும்பத்தினர், அடிக்கடி ஜேம்ஸையும், கூலிப்படையினரையும் சந்தித்துப் பேசியதை நோட்டமிட்ட காவலர்கள், அவர்களை ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

இதில் சுப்பையாவை கொலை செய்தற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததும் கூலிப்படையினரையும், ஜேம்ஸையும் கைது செய்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

திருப்புமுனையாக மாறிய அப்ரூவரின் வாக்குமூலம்
டாக்டர் சுப்பையாவை கொலை செய்த கூலிப்படையினரில் அய்யப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறி, கொலைச் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில், மிக முக்கிய திருப்புமுனையாக இந்த வாக்குமூலம் அமைந்திருந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன், அப்ரூவராக மாறி அளித்த வாக்குமூலத்தில், கன்னியாகுமரி மாவட்ட அஞ்சுகிராமத்தில் உள்ள ரூ.10 கோடி மதிப்பிலான நில விவகாரத்தில் டாக்டர் சுப்பையா என்பவர் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் பொன்னுசாமி குடும்பத்தினர் தெரித்தனர். 

இந்தக் கொலையை செய்தால் ரூ.50 லட்சமும், வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகவும் கூறினர். இதனால் டாக்டர் சுப்பையாவை கொலை செய்ய, குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருடன் நானும் சென்றேன். 

டாக்டர் சுப்பையாவை கொலை செய்த அவர்களை இருசக்கர வாகனத்தில் நான் அழைத்துச் சென்றேன். உயிரை காப்பாற்றும் டாக்டரை கொலை செய்தது மன உளைச்சலைத் தந்தது. எனவே தாமாக முன்வந்து இந்த வாக்குமூலத்தை அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, இன்று கூலிப்படையினர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT