தமிழ்நாடு

தடுப்பூசி சான்றிதழ் பல நிலைகளில் ஆவணமாக கருதப்படலாம்: தமிழிசை சௌந்தரராஜன்

2nd Aug 2021 04:41 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் : கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ், பிற்காலத்தில் கல்வி, அரசுச் சலுகை உள்ளிட்ட பல நிலைகளில் ஆவணமாக கருதப்படலாம் எனவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வர வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மயிலாடுதுறையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை பிற்பகல் காரைக்கால் வந்த அவர், மாவட்ட ஆட்சியரகத்தில் கரோனா தடுப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், நல்வழித்துறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது : கரோனா 2-ஆவது அலையை கட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கை, மருத்துவமனையின் செயல்பாடு, மருத்துவமனையில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. அனைவரின் கூட்டு முயற்சியால் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 3-ஆவது அலை வரும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் புதுவை அரசு நிர்வாகம் தயாராக உள்ளது. காரைக்காலிலும் அதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளன.

ADVERTISEMENT

கரோனா கட்டுக்குள் இருக்க தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. புதுவையில் போதுமான அளவு ஊசி கையிருப்பில் உள்ளது. புதுவையில் வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வேலைக்குச் சென்று மாலை வேளையில் வருவோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பணிகள் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்காலிலும் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும்.

காரைக்காலில் 5 கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதான தகவல் வரவேற்புக்குரியது. ஆக.15-க்குள் புதுவை 100 சதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலம் என்ற பெருமைக்காக துடிப்புடன் பணியாற்றி வருகிறது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பசுமை புதுவை என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. காரைக்காலில் 7,500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இது மக்கள் இயக்கமாக நடைபெறவேண்டும். இதுபோல ஒரே நாளில் பல ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையிலும் பல உத்திகள் வகுக்கப்பட்டுவருகின்றன.

தடுப்பூசி செலுத்தியபின் கிடைக்கும் சான்றிதழ், பிற்காலத்தில் அரசு  சலுகை பெறவும், திட்டங்கள் கிடைக்கவும், பள்ளி, கல்லூரிகளில் சேரவும்  ஆவணமாக கேட்கப்படலாம். எனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டு அனைவரும் சான்றிதழை பத்திரமாக வைத்திக்கொள்ளவேண்டும்.

பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருந்துவிட்டால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தைகளை தேவையின்றி வெளியே அழைத்துச் செல்லவேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். 3-ஆவது அலை காலம் தாண்டிய பின் குழந்தைகளை சுதந்தரமாக விடலாம்.

குழந்தைகள் பாதுகாப்பான முறையில் இருப்பார்கள் என்ற நிலை வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

புதுச்சேரியில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்ற முறையில் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்றார்.

முன்னதாக கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர்  நிகாரிகா பட், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT