தமிழ்நாடு

ஆடிக்கிருத்திகை: வைத்தீஸ்வரன் கோயில் வாசலில் தீபமேற்றி வழிபட்ட பக்தர்கள்

2nd Aug 2021 02:46 PM

ADVERTISEMENT

சீர்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் வாசலில் தீபங்கள் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்  தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி அருள் பாலித்து வருகிறார். நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமாரசாமி, தன்வந்திரி சாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 

இக்கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு 21 வகையான மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், முதலான நறுமணப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து ஆபரணங்கள், மலர் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சண்முகார்ச்சனை நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார் . 

இதனிடையே கரோனா தொற்று மாநிலம் முழுவதும் பரவி வருவதால் நவகிரக ஸ்தலங்கள் மற்றும் கடற்கரைகளில் மக்கள் கூடுவதைத் தடுக்க மூன்று நாள்கள் பக்தர்கள் வருகைக்கு  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  லலிதா தடை விதித்துள்ளார். அதன்படி வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாட்டுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கிருத்திகை வழிபாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கோயில் நடை சாத்தி இருப்பதைக் கண்டு கோயில் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்து, கோயில் வெளிப்பிரகாரத்தில் நெய் தீபங்களை ஏற்றி  பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர். 


இதேபோல் நவகிரகங்களில் புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிகோயில், கேது ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில் மற்றும் சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களும் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன.

Tags : Vaitheeswaran temple tn temple krithigai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT