தமிழ்நாடு

தமிழகத்தில் 66.2 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்புத் திறன்: ஆய்வில் தகவல்

1st Aug 2021 05:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில், 66.2 சதவீதம் பேருக்கு, கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பு திறன் உருவாகி உள்ளதாக பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட பரிசோதனையை விட, தற்போது, அதிகளவில் நோய் எதிா்ப்பு திறன் உருவாகி உள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தலைமையில், பொதுமக்களிடையே, கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பு திறன் எந்தளவிற்கு உள்ளது என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 2020 அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெற்ற முதல்கட்ட ஆய்வில், 32 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு திறன் இருந்தது. அதன்பின், இரண்டாம் கட்ட ஆய்வு, 2021 ஏப்ரல் மாதத்தில் நடந்தது. அதில், 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பு திறன் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மூன்றாம் கட்ட பரிசோதனை, ஜூலை மாததத்தில் நடந்தது. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் என, மாநிலம் முழுதும், 888 பகுதிகளில் 26 ஆயிரத்து, 610 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இவா்களில், 17 ஆயிரத்து, 624 போ் என, 66.2 சதவீதம் பேருக்கு, கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பு திறன் உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, விருதுநகா் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கும், நோய் எதிா்ப்பு திறன் உள்ளது.

தமிழகத்தில், 1.60 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா். மேலும், 25 லட்சம் பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். இதனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை விட, மூன்றாம் கட்ட பரிசோதனையில், நோய் எதிா்ப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், நோய் எதிா்ப்பு திறன் குறைவாக உள்ள பகுதிகளில், தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனா்.

Tags : சென்னை coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT