தமிழ்நாடு

18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகமே: சுகாதாரச் செயலாளர்

30th Apr 2021 12:18 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், நாளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது சந்தேகமே என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.

அப்போது அவர் பேசுகையில், 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு போடும் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்னும் வரவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மருந்துகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து எப்போது வரும் என்று தெரியவில்லை. தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும்.

நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறீர்களா, இதைப் படியுங்கள்.. 

ADVERTISEMENT

எனவே, 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு நாளை கரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே.  அதேவேளையில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்காக, 1.5 கோடி தடுப்பூசி வாங்க தமிழக அரசு ஏற்கனவே ஆணைப் பிறப்பித்திருந்தாலும், அவை எப்போது வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கரோனா நோயாளிகளுக்குப் போடப்படும் ரெம்டெசிவரை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலேயே, கரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில்தான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT