தமிழ்நாடு

பச்சைப் பட்டுடுத்தி செயற்கை வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

27th Apr 2021 10:11 AM

ADVERTISEMENT


மதுரை: பச்சைப் பட்டுடுத்தி கோயில் வளாகத்திலேயே அமைக்கப்பட்ட சிறிய செயற்கை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று பக்தர்களின்றி கோயிலுக்குள் நடைபெற்றது.

மேலூர் அருகே உள்ள கள்ளழகர் கோயில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டியில், வைகை ஆற்று நீர் நிரப்பப்பட்டது. அந்த தொட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணிந்து கொண்டு, பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டாம் ஆண்டாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பக்தர்களின்றி நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பத்கா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்துக்குள்ளேயே திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை முன்னிட்டு, தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் வியாழக்கிழமையும், திக் விஜயம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

தொடா்ந்து, உலகம் முழுவதும் உள்ள பக்தா்கள் தரிசிக்கும் திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இரவில் திருக்கல்யாண கோலத்தில் பூப்பல்லக்கில் மீனாட்சியம்மன் எழுந்தருளினாா். திருக்கல்யாண வைபவம் கோயில் இணைய தளம் மற்றும் யூ-டியூப் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், கோயிலுக்குள்ளேயே சட்டத்தோ் பவனி நடைபெற்றது. இந்த சட்டத்தேரை, கோயில் பணியாளா்கள், காவல் துறையினா் வடம்பிடித்து இழுத்தனா். சட்டத்தேரில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா், பிரியாவிடை பவனி வந்தனா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், சட்டத்தோ் பவனி நிகழ்ச்சி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT