தமிழ்நாடு

50 ஆண்டுகளாக காளைகளை பூட்டியே உழவு செய்யும் விவசாயி!

27th Apr 2021 03:11 PM | பெரியார்மன்னன்

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 58 வயதான விவசாயி ஒருவர், இந்த நவீனக் காலத்திலும் 50 ஆண்டுக்கு மேலாக இன்றளவும் காளைகளைப் பூட்டியே உழவு செய்து வருகிறார். கட்டை மாட்டு வண்டியிலேயே விவசாய விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு பயணித்து வருகிறார்.

அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகளால் மற்ற துறைகளைப் போலவே, வேளாண்மைத் துறையிலும் நவீன கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், ஏர் உழுதல், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லல், கிணற்றிலிருந்து தண்ணீர் ஏற்றம் இரைத்தல், கதிரடித்து தூற்றி தானியங்களை பிரித்தெடுப்பதால் உள்ளிட்ட பெரும்பாலான வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு, காளைகளை பயன்படுத்துவது படிப்படியாக வழக்கொழிந்து போனது. 

விவசாயப் பணிகளுக்கு காளைகளுக்கும், கட்டை வண்டிகளுக்கும் மாற்றாக, டிராக்டர், அறுவடை இயந்திரங்களே பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்காலமாக, காளைகளை பூட்டி ஏர் உழுவும் விவசாயிகளையும், கட்டை வண்டியில் விளைபொருட்களை ஏற்றிச்செல்வதையும் காண்பதே அரிதாகிப்போனது. ஆனால் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வீராசாமி 58 என்பவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் காளைகளை பூட்டியே விளைநிலத்தை உழவு செய்து வருகிறார். இதுமட்டுமின்றி, விவசாய விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கு கட்டைமாட்டு வண்டியிலேயே பயணித்து வருகிறார்.

ADVERTISEMENT

விளைநிலத்தை உழவு செய்வதில் தொடங்கி அறுவடை செய்வது வரை எதற்கும் நவீன இயந்திரங்கள், கருவிகளை பயன்படுத்தாமல், காளைகளையே பயன்படுத்தி வரும் விவசாயி வீராசாமி, பாரம்பரியத்தை காப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

விவசாயி வீராசாமி நமது நிருபரிடம் கூறியதாவது:

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். 16 வயதிலிருந்தே ஆர்வத்தோடு விவசாயம் செய்து வருகிறேன். எனது மகன் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நான் இதுவரை, நிலத்தை உழவு செய்வதற்கும், விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கும் நவீன வாகனங்கள், இயந்திரங்களைப் பயன்படுத்தியதில்லை. ஏர் உழுதல் மற்றும் வண்டி இழுப்பதற்கும் காளைக்கன்றுகளைப் பழக்கப்படுத்தும் கலையை எனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். 

இதுவரை 15க்கும் மேற்பட்ட ஜோடி காளைக்கன்றுகளை வாங்கி, பழக்கப்படுத்தி விவசாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளேன். கடந்த இரு ஆண்டாக செந்நிற அந்தியூர் காளைகளை வைத்து ஏர் உழுது வருகிறேன். மற்ற விவசாயிகளின் நிலத்தையும் காளைகளைக் கொண்டு உழுது கொடுத்தும் வருகிறேன். இதனால் எனக்கு வருவாய் கிடைக்கிறது. விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை. பாரம்பரிய முறையைத் தொடர்ந்து பின்பற்றுவதில் மனநிறைவு கிடைக்கிறது என்றார்.

வாழப்பாடி அடுத்த உமையாள்புரத்தில் காளைகளை பூட்டி ஏர் உழும் விவசாயி வீராசாமி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT