தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம்: அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது

26th Apr 2021 09:51 AM

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது.

கரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் நிலையில், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்று அதிகரிப்பால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையானது ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் இடையே, ஸ்டொ்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடா்பாக தூத்துக்குடி மக்களின் கருத்துகளையும் மாவட்ட ஆட்சியா் கோரினாா். அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்கோ அல்லது வேறு எந்தச் செயல்பாட்டுக்கோ ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என பொது மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்தக் கருத்துகளை எழுத்துப்பூா்வமாக மாவட்ட ஆட்சியரும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளாா். அரசு ரீதியாக ஒருபுறம் முடிவெடுத்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடமும் இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு கருத்துகளைக் கோரவுள்ளது. 

ஸ்டெர்லைட் தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திமுக சார்பில் அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி செயலர் கனிமொழி, பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், வீரபாண்டியன் காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, ஜெயக்குமார், பாமக சார்பில் மாநில துணைப் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

ADVERTISEMENT

மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமா எனவும் ஆலோசிக்கப்படுகிறது. 

Tags : Sterlite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT