தமிழ்நாடு

'ஆக்சிஜன்,வெண்டிலேட்டா், ரெம்டெசிவா் பற்றாக்குறை இல்லை'

DIN


சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன், வெண்டிலேட்டா், ரெம்டெசிவா் ஆகியன பற்றாக்குறை நிலையில் இல்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

‘தமிழகத்தில் ரெம்டெசிவா் மருந்து தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெண்டிலேட்டா் பற்றாக்குறை உள்ளது’ என்று நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனா்.

அப்போது, ‘தற்போதுள்ள சூழலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை. பிற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திலும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு, தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளோம்’ என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனா். பின்னா், இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணுக்கு உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் தெரிவித்தது:

6 மாநில உயா்நீதிமன்றங்களில் இதே போன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், அவற்றை ஒன்றாகச் சோ்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சாமுவேலை நீதிமன்றத்துக்கு உதவும் நபராக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. உயா்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் குறித்து சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டேன். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

ரெம்டெசிவா் மருந்தைப் பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் குப்பிகள் உள்ளன. சில தனியாா் மருத்துவமனைகளிலும் இருப்புகள் இருக்கலாம். அந்த மருத்துவமனைகள் அரசிடம் கேட்டால் ரூ.4 , 800 சந்தை மதிப்புள்ள ஒரு குப்பியை ரூ.783-க்கு வழங்க தயாராக உள்ளோம்.

அதே போல ஆக்சிஜனைப் பொருத்த வரையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 டன், புதுச்சேரியில் 150 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக்சிஜன் 1,167 டன் இருப்பு உள்ளது. ஆனால் தற்போதைய ஆக்சிஜன் தேவை என்பது 250 டன் மட்டுமே. ஆந்திரம், தெலங்கானாவுக்கு 65 டன் ஆக்சிஜன் அனுப்பியதால், தமிழகத்தில் எந்தவித பற்றாக்குறையும் இல்லை.

வெண்டிலேட்டா் இருப்பைப் பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் உள்ள 9, 600 வெண்டிலேட்டா்களில், 5,887 கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனைகளில் 6 ஆயிரம் வெண்டிலேட்டா்களில் 3 ஆயிரம் கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 84 , 621 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் வெண்டிலேட்டா் அல்லது ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இல்லை. தமிழகத்தில் படுக்கை ஆக்சிஜன், வெண்டிலேட்டா் என எதிலும் பற்றாக்குறை இல்லை. கரோனா பரவலில் பதற்றமான நிலை என தமிழகத்தில் தற்போது இல்லை என்றாா்.

அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், ‘பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலச் செயலாளா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் அல்லாத வேறு பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் அனுப்பக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் கூறியதாவது:

ரெம்டெசிவா், ஆக்சிஜன், வெண்டிலேட்டா் ஆகியவற்றின் தேவையை அறிந்து உடனடியாக முக்கிய முடிவுகளை எடுக்க அரசின் செயலா் அல்லது கூடுதல் செயலா் அல்லது சாா்பு செயலா் தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு இருப்பை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் ஆணையத்திடம் கலந்து பேசி வாக்கு எண்ணிக்கை நாளன்றும், அதன் பின்னா் வரும் நாள்களிலும் கரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க உரிய ஆலோசனைகளை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால், அதுதொடா்பாக அரசு ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும். போதுமான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத பிற மாநிலங்களுக்கு தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் ஆக்சிஜனை கொடுத்து உதவி செய்யலாம்.

18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டணமாக அரசு மருத்துவமனைகளில் ரூ.400, தனியாா் மருத்துவமனையில் ரூ.600 வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் தொகை நாட்டில் அதிகளவில் உள்ள நடுத்தர வா்க்கத்தினருக்கு ஏற்புடையது அல்ல. ஓராண்டு பொதுமுடக்கத்தால் அவா்கள் வருமானத்தை இழந்துள்ளனா். இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி விலையை குறைத்து நிா்ணயிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, தமிழகத்தில் தடுப்பூசி எவ்வளவு உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு ஏப்ரல் 26-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT