தமிழ்நாடு

நதிகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள்: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

21st Apr 2021 01:19 PM

ADVERTISEMENT

 

சென்னை: நதிகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மணி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், விழுப்புரம் மாவட்டம், நரையூர் கிராமத்தில் ஓடும் பாசன கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுவதால், விவசாயம் பாதிப்பதுடன், கழிவுகளால் கால்வாயின்  நீர் போக்குவரத்தும் தடைபடுவதாக கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கழிவுநீரை கால்வாயில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நதிகள், கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதால், நீர் மாசடடைகிறது.  இதனைத் தடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் நதிகள் மற்றும் கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தடுக்கவும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT