தமிழ்நாடு

மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக் கோரிய வழக்கு: இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

21st Apr 2021 11:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக் கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகம். நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

இந்த திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது, முடித் திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பது, காரில் ஏற அறுகதை இல்லை என காரின் பின்னே ஓடி வரச் சொல்வது போன்ற காட்சிகள்  இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளை தணிக்கை செய்ய தணிக்கைக் குழு தவறி விட்டது. இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்  என கோரியிருந்தனர். 

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக திரைப்பட தணிக்கை வாரியம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோனே அஸ்வின் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : mandela
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT