தமிழ்நாடு

25,000 போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

இதுவரை 70,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழக, தலைமை அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை, போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி இன்று பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு எட்டு போக்குவரத்துக் கழகங்களில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என ஏறத்தாழ 1,20,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 45 வயதிற்கு மேற்பட்ட ஏறத்தாழ, 70,000 பணியாளர்களுக்கு, கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியானது, கடந்த மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றில், நேற்று (20.04.2021) வரையில், ஏறத்தாழ 37 சதவிகிதம் (25,459 பேர்) பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை துரிதப்படுத்திட, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியுள்ள பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆவன செய்யுமாறு அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
இவர்களில் சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதயப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு இணைய நோய் உள்ளவர்கள் உரிய மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோவிட் நோய் தடுப்பூசியினை வழங்கியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், உள்ளாட்சித் துறைக்கும், போக்குவரத்துத்துறையின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சராசரியாக நாளொன்றுக்கு, 12 முதல் 15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த நோய் தொற்று காரணமாக, கடந்த காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இந்த நிலையிலும், பயணிகளின் நலன் கருதி தேவையான பேருந்துகள் உரிய முறையில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. பயணிகளின் நலன் கருதியும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பாதுகாப்புக்காகவும், முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் பயன்பாட்டிற்காக கிருமி நாசினியும், முகக்கவசம் அணியாத ஒரு சில பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கிட ஏதுவாக, ஒரு சில போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநரிடம் கூடுதல் முகக்கவசங்கள் வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி, பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணித்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கு நேற்று (20.04.2021) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 16,284 பேருயதுகள், சென்னையில் 2,790 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 345 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. பேருந்தில் பயணிக்கின்ற பயணிகள், உரிய நேரத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக, குறிப்பாக இரவு 10.00 மணிக்குள்ளாக சென்றடைகின்ற வகையில், அந்தந்த போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், பேருந்து நிலையங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 80 சதவிகித அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இரவில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது பகலில் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருயதுகள் இயக்கப்படும். 

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளில், உள்ளூர் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன” என்று போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT