தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் விடுமுறை நாளில் சர்வர், ஏசி இயங்கியதில் சந்தேகம்: செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

DIN

கரூர்: வாக்கு எண்ணும் மையத்திற்குள் விடுமுறை நாளில் சர்வர், கணினி, ஏசி இயங்கியதில் சந்தேகம் உள்ளது என கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

கரூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் வாக்குப்பதிவான இயந்திரங்கள் அனைத்தும் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு எண்ணும் அறையின் அருகே உள்ள அறையில் சர்வர், ஏசி இயங்கியதாக திமுக முகவர்கள் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் திங்கள்கிழமை காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் புகார் கூறப்பட்ட அறையையும் பார்வையிட்டு கணினி பொறியாளர்கள் மூலம் சோதனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வி.செந்தில்பாலாஜி, கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 2 ஆம் தேதி குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 தொகுதிகளுக்கும் இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் பின்புறம் கேமரா பொருத்தப்படாமல் இருந்ததை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவித்ததால் பொருத்தப்பட்டது.

நேற்றும், நேற்று முன்தினமும் கல்லூரி விடுமுறை நாளில் கல்லூரி நிர்வாகத்தின் கணினி அறை மட்டும் இயங்கியதாக எங்களது முகவர்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக அந்த அறை பூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ஏசி வேலை செய்கிறது., சர்வரும் இயங்குகிறது. இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. முழுமையாக சந்தேகத்தை தீர்க்க முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை பொருத்தவரை தேர்தல் ஆணையமும் சரி, மாவட்ட தேர்தல் அதிகாரியும் சரி, மிகத்தெளிவாக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 28 மேஜைகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அப்போதுதான் விரைவாக வாக்கு எண்ணிக்கையை முடிக்க முடியும். ஒரு ரவுண்டு வாக்கு எண்ணிக்கை முடிய 45 நிமிடமாகிவிடும். எனவே 28 மேஜை வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆட்சியர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். கூடுதல் அறை என்பது முக்கியமல்லை. கூடுதல் மேஜைகள்தான் முக்கியம். 355 பூத்துகளில் 77 வேட்பாளர்களுக்கும் வாக்கு எண்ணிக்கை 45 நிமிடமாகினால் வாக்கு எண்ணிக்கை முடிய அடுத்த நாளாகிவிடும். கரோனா காலம் என்பதால் 77 வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் நிற்கவேண்டும். எனவேதான் 28 மேஜை வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிக்கும் மனு அனுப்பியுள்ளோம். இப்போது 14 மேஜைகள்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால்தான் கூடுதலாக கேட்டுள்ளோம். வாக்கு எண்ணும் மையத்தில் எந்த உபகரணமும் கொண்டு வரக்கூடாது. கல்லூரி நிர்வாகமே இருந்தாலும் வாக்கு எண்ணும் வரை தடை செய்ய வேண்டும்.இது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.

இதை மாவட்ட நிர்வாகமோ, தேர்தல் ஆணையமோ தட்டிக்கழிக்கக் கூடாது. வாக்கு எண்ணிக்கை சுதந்திரமாக நடக்கக்கூடிய பணி. கல்லூரி வளாகத்தில் லேப்டாப் கொண்டு வருவோம், சர்வர் வரும், கல்லூரி நிர்வாகம்தான் அது, என மாவட்ட தேர்தல் நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது. கல்லூரி வளாகத்திற்குள்தான் அனைத்து வாக்கு எண்ணிக்கை அறைகளும் உள்ளது. இங்கிருக்கும் சர்வரோ, வை-பையோ அங்கும் வேலை செய்யலாம். இதனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கல்லூரிக்குள் சர்வரையோ, வை-பையோ வேலை செய்ய கல்லூரி நிர்வாகத்தை அனுமதிக்கக்கூடாது.

கல்லூரி விடுமுறை நாளில் எப்படி ஏசி இயங்கும், சர்வர் ஓடும். இனி காலை, மாலை இருவேளை வந்து முழுக்கவனம் செலுத்துவோம். தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக பணிகளை விரைவுப்படுத்தி, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கை மைய பகுதிகளை பாதுகாக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தினருக்கு மட்டுமே சர்வர் லிங்க் எங்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என தெரியும். ஒரே சர்வரில் அனைத்து கணினிகளும் இயங்கும் என்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. கண்டெய்னர், ஏரியல் வைச்ச கோபுரம் இருக்கிறது என பலவாறு பேசப்படும் நிலையில், இùதையெல்லாம் பார்க்கும்போது, நிர்வாகம் கொடுத்த பதிலும் ஏற்புடையதாக அல்ல. மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லூரிக்குள் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT