தமிழ்நாடு

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

DIN

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிா்வாக ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமாா் வா்மா உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது. தேசிய பசுமைத் தீா்ப்பாய சட்ட பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சாா்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சாா்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவா் 3 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளாா். எனவே அவரது நியமனம் தேசிய பசுமைத் தீா்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தானராமன், சுற்றுச்சூழல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் மேலாண்மை ஆகிய துறைகளில் கிரிஜா வைத்தியநாதன் 5 ஆண்டுகள் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளாா். இதுதவிர நெகிழிப் பொருள்கள் தடை விதிப்பு வழிகாட்டுக் குழுவின் தலைவராகவும், கூவம் ஆறு சுத்தம் செய்யும் கண்காணிப்புக் குழுவிலும் இடம்பெற்றுள்ளாா். சுற்றுச்சூழல் தொடா்பான துறைகளில் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளதாக வாதிட்டாா். அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் தொடா்பான துறையில் கிரிஜா வைத்தியநாதன் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளாா்.இதனால் அவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினா் பதவிக்கான நியமனத்துக்கு தகுதி பெறுகிறாா். எனவே அவரது நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT