தமிழ்நாடு

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வடமாநில பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு

DIN

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் விருப்பதுக்கு மாறாக தங்கவைக்கப்பட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 19 பெண் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இருந்து 19 பெண் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் அழைத்து வரப்பட்டனர். இந்தத் தொழிலாளர்களுக்கு பின்னலாடை நிறுவனத்தில் ஊதியம் இல்லாமல் 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்குப் பின்னர் பெண் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்திருந்தனர். ஆனால் பின்னலாடை நிர்வாகம் தொழிலாளர்களை ஒரு மாதம் பணியாற்றி விட்டு ஊருக்குச் செல்லும்படி வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பெண் தொழிலாளர்கள் தங்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் அந்த மாநில அரசிடம் முறையிட்டுள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.

இதன்பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறையினர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் 15 வேலம்பாளையம் காவல் துறையினர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். இதில், ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த 19 பெண் தொழிலாளர்கள் விருப்பத்துக்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பெண்களை மீட்டு 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மேலும், அவர்களை சொந்த ஊர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, விருப்பத்துக்கு மாறாகப் பெண்களை தங்கவைத்திருந்த பின்னலாடை நிறுவன உரிமையாளரான நந்தா (40) என்பவரிடம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT