தமிழ்நாடு

குடியாத்தம் அருகே பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியம், எர்த்தாங்கல் ஊராட்சிக்குள்பட்டது கலர்பாளையம் கிராமம். வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சிறுத்தை ஒன்று அக்கிராமத்துக்குள் நுழைந்துள்ளது. சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டு, அருகே உள்ள வேலாயுதம் வீட்டிலிருந்து அவரது மனைவி பிரேமா(35) வெளியே வந்துள்ளார். அவரை சிறுத்தை தாக்கியுள்ளது.  பின்னர் சிறுத்தை அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அப்போது அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பிரேமாவின் மகன் மனோகரன்(20), மகள் மகாலட்சுமி(15) ஆகியோரையும்  சிறுத்தை  காயப்படுத்தியது.

சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்ததும், சமயோசிதமாக செயல்பட்ட பிரேமா வீட்டின் கதவை சாத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டார். அதற்குள் கிராம மக்கள் அங்கு கூடினர். காயமடைந்த பிரேமா, மனோகரன், மகாலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு  செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் பேர்ணாம்பட்டு வனத்துறையினர், காவல்துறையினர் அங்கு வந்தனர். வீட்டுக்குள் இருந்த சிறுத்தை மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜஸ், உதவி வன பாதுகாவலர் ஆர்.முரளிதரன், பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் எல்.சங்கரய்யா, வனவர் பி.ஹரி ஆகியோர் அங்குச் சென்றனர்.

வீட்டில் சிக்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஓசூரிலிருந்து வனவிலங்கு மீட்புப்படை மருத்துவர் குழு, தலைமை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் அங்கு வந்தது.

வீட்டைச் சுற்றி ஏராளமான மக்கள் கூடியதால், சத்தம்கேட்டு, சிறுத்தை வீட்டின் பூஜை அறையில் பதுங்கிக் கொண்டது. அறையிலிருந்து வெளியே வந்தால், ஜன்னல் வழியாக மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க மருத்துவர் குழு தயாராக இருந்தது.

ஆனால், சிறுத்தை அறையிலிருந்து வெளியே வராததால், அறையின் சுவரில் துளையிட்டு பதுங்கியிருந்த சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 15 நிமிடங்களில் சிறுத்தை மயக்கமடைந்தது. உடனே, வீட்டின் கதவைத் திறந்து, மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வனத்துறையினர் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று தயாராக வைத்திருந்த கூண்டில் போட்டு அடைத்தனர். 

பிடிபட்டது ஆண் சிறுத்தை என்றும், அதற்கு ஐந்தரை வயது இருக்கலாம், குண்டலப்பள்ளி காப்புக் காட்டிலிருந்து வழி தவறி சிறுத்தை, கலர்பாளையம் கிராமத்துக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் சிறுத்தை அடைக்கப்பட்ட கூண்டை வனத்துறையினர் பேர்ணாம்பட்டை அடுத்த சாரங்கல் காப்புக் காட்டிற்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு மயக்கம் தெளிய சிறுத்தைக்கு மற்றொரு ஊசி செலுத்தப்பட்டது. அப்போது தயாராக வைத்திருந்த இறைச்சி மற்றும் தண்ணீரை வனத்துறையினர் கூண்டில் வைத்தனர். ஊசி செலுத்தப்பட்ட 10 நிமிடங்களில் சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்தது.

இதையடுத்து இறைச்சியை தின்ற சிறுத்தை, தண்ணீரையும் குடித்தது. பின்னர் கூண்டு திறக்கப்பட்டதும், சிறுத்தை வேகமாகப் பாய்ந்தோடி வனப்பகுதிக்குள் சென்றது.

சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பிரேமா, மனோகரன், மகாலட்சுமி ஆகியோருக்கு தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT