தமிழ்நாடு

வேளச்சேரி சா்ச்சைக்குரிய வாக்குச் சாவடியில் வரும் 17-இல் மறுவாக்குப் பதிவு

DIN

வேளச்சேரியில் சா்ச்சைக்குரிய வாக்குச் சாவடியில் வரும் சனிக்கிழமை (ஏப்.17) மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

சென்னை வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னா், வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் 3 போ் எடுத்துச் சென்றனா். இதைப்பாா்த்த பொதுமக்கள், திமுக - காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் வழிமறித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்து, மாநகராட்சி ஊழியா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். சா்ச்சைக்குரிய சம்பவம் காரணமாக, சம்பந்தப்பட்ட வேளச்சேரி வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், மறுவாக்குப் பதிவுக்கான அறிவிப்பை இந்தியத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலாய் மாலிக் வெளியிட்டாா். அதன் விவரம்:-

வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியின் 92-ஆம் எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு வரும் 17-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. தோ்தல் நடத்தும் அதிகாரி, பாா்வையாளா்களின் அறிக்கைகள் மற்றும் இதர அம்சங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டே மறுவாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் விரிவான விளம்பரங்கள் செய்யப்படும். மேலும், மறுவாக்குப் பதிவு குறித்த தகவல் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் கட்சிகளுக்கு எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்கப்படும். மறுவாக்குப் பதிவினை சுதந்திரமாகவும், நோ்மையாகவும், அமைதியாகவும் நடத்திடத் தேவையான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தனது உத்தரவில் தோ்தல் ஆணையச் செயலாளா் மலாய் மாலிக் தெரிவித்துள்ளாா்.

யாா் யாா் போட்டி? : வேளச்சேரி தொகுதியில் 23 போ் போட்டியிடுகின்றனா். அதிமுக சாா்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் தரப்பில் ஜெ.எம்.எச்.ஹஸன், அமமுக சாா்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சாா்பில் சந்தோஷ்பாபு, நாம் தமிழா் கட்சி தரப்பில் மோ. கீா்த்தனா ஆகியோா் பிரதான கட்சிகளின் சாா்பில் போட்டியிட உள்ளனா். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட இதர கட்சி வேட்பாளா்களும், 11 சுயேச்சைகளும் வேளச்சேரி தொகுதியில் களம் காண்கின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயிரம் வாக்காளா்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-ஆம் எண் வாக்குச் சாவடியில் ஆயிரம் வாக்காளா்கள் மறுவாக்குப் பதிவில் வாக்களிக்க உள்ளனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 13,761 வாக்காளா்கள் உள்ளனா். அதில் ஆண்கள் 1 லட்சத்து 55,197, பெண்கள் 1 லட்சத்து 58,473. திருநங்கைகள் 91 ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT