தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றம்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை (ஏப். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நடைபெறும் 12 நாள்களிலும் காலை-மாலை இருவேளைகளிலும் பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த ஆண்டைப் போலவே பக்தா்கள் பங்கேற்பின்றி உள் திருவிழாவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சித்திரைத் திருவிழா வைபவங்களை இரண்டாவது ஆண்டாகத் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் சித்திரைத் திருவிழாவை வழக்கம்போல நடத்த வேண்டும் என வலியுறுத்தின. இதையடுத்து சித்திரைத் திருவிழா நடைபெறும் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 26 ஆம் தேதி வரை12 நாள்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தன்று, சுவாமி-அம்மன் திருக்கல்யாண கோலத்தை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதே சமயம் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை திருவிழா கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோயில் வளாகத்திலேயே பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட உள்ளது. தினசரி காலை -மாலை நடைபெறும் சுவாமி புறப்பாட்டின்போது பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. திருவிழாவையொட்டி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கொடியேற்றம்: திருவிழா கொடியேற்றம் நடைபெறும் வியாழக்கிழமையன்று, சுவாமி புறப்பாடு காலை 9 முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.30 முதல் 7.30 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் காலை 6 முதல் 9, காலை 11.30 முதல் 12.30, மாலை 4 முதல் 5.30 மற்றும் இரவு 7.30 முதல் 9 மணி வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

இரண்டாம் திருநாள் முதல் 7 ஆம் திருநாள் வரை (ஏப். 16 முதல் 21) சுவாமி புறப்பாடு காலை 8 முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெறும். இந்நாள்களில் தினமும் காலை 6 முதல் 8, காலை 9 முதல் பகல் 12.30, மாலை 4 முதல் 5.30 மற்றும் இரவு 7.30 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

பட்டாபிஷேகம்: எட்டாம் திருநாளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுவாமி புறப்பாடு காலை 8 முதல் 9 மற்றும் மாலை 6.30 முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. ஆகவே, காலை 6 முதல் 8, காலை 9 முதல் 12.30, மாலை 4 முதல் 6.30 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். ஒன்பதாம் திருநாள் திக்குவிஜயத்தன்று, வரை சுவாமி புறப்பாடு காலை 8 முதல் 9 மற்றும் மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். இந்நாள்களில் தினமும் காலை 6 முதல் 8 , காலை 9 முதல் பகல் 12.30, மாலை 4 முதல் 5.30 மணி வரை மற்றும் இரவு 7.30 வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

திருக்கல்யாணம்: பத்தாம் திருவிழாவாக ஏப்ரல் 24-ஆம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவாமி-அம்மன், பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கின்றனா். மாலை 3.30 முதல் 5.30 வரை இரவு 7.30 முதல் 9 வரையும் வழக்கமான தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

சட்டத் தோ்:11-ஆம் திருநாள் சட்டத்தோ் நிகழ்ச்சியையொட்டி காலை 7 முதல் பகல் 12.30 வரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம். மாலை 5 முதல் 7 மணி வரை சட்டத்தோ் பவனி நடைபெறுகிறது. மாலையில் வழக்கம்போல சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 12-ஆம் திருநாளான ஏப்ரல் 26ஆம் தேதியோடு சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. அன்றைய தினம் காலை 7 முதல் 10.30 வரை மற்றும் மாலை 4 முதல் 5.30 மற்றும் இரவு 7.30 முதல் 9 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT