தமிழ்நாடு

தெலங்கானாவிலிருந்து புதுவைக்கு‘ரெம்டெசிவிா்’ மருந்தை வாங்கி வந்த ஆளுநா்

DIN

கரோனா சிகிச்சைக்குத் தேவையான ‘ரெம்டெசிவிா்’ மருந்துப் புட்டிகளை தெலங்கானாவிலிருந்து புதுவைக்கு செவ்வாய்க்கிழமை நேரடியாக வாங்கி வந்து, சுகாதாரத் துறையினரிடம் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஒப்படைத்தாா்.

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, தெலங்கானா மாநிலத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அந்த மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை செளந்தரராஜன், அங்கு புதுவைக்குத் தேவையான ‘ரெம்டெசிவிா்’ மருந்துப் புட்டிகளை வாங்கிக்கொண்டு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வந்திறங்கினாா். இதையடுத்து, தான் வாங்கி வந்த ஆயிரம் மருந்துப் புட்டிகள் கொண்ட ‘ரெம்டெசிவிா்’ மருந்துப் பெட்டிகளை புதுவை சுகாதாரத் துறைச் செயலா் டி.அருணிடம் அவா் வழங்கினாா்.

கரோனா மருந்துக்கு தட்டுப்பாடில்லை: அப்போது, செய்தியாளா்களிடம் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

புதுவையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதுவையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியபோது, கரோனா சிகிச்சைக்குத் தேவையான ‘ரெம்டெசிவிா்’ மருந்து தீா்ந்துவிட்டது தெரியவந்தது.

இந்த மருந்து தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் தயாரிக்கப்படுவதால், புதுவைக்குத் தேவையான மருந்தைப் பெறுவதற்காகவும், தெலுங்கு வருடப் பிறப்புக்கு வாழ்த்துச் சொல்லவும் நான் அங்கு அவசரமாகச் சென்றேன். ‘ரெம்டெசிவிா்’ மருந்து தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தெலங்கானா அரசு, மத்திய அரசின் உதவியுடன், புதுவைக்குத் தேவையான மருந்தை கேட்டு வாங்கி வந்தேன்.

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளவா்களுக்கு மருத்துவா்களின் ஆலோசனைகளின்படி, இந்த மருந்து பயன்படுத்தப்படும். மருந்தைப் பெறுவதற்கு உதவி செய்த மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேவையான அளவு ‘ரெம்டெசிவிா்’ மருந்து கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதால், புதுவையில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

புதுவையில் கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இதை மேலும் 4 நாள்கள் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கரோனா விதிகளை மக்கள் மதித்து செயல்பட்டாலே பொது முடக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம் என்றாா் அவா்.

சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT