தமிழ்நாடு

தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

DIN

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: சித்திரையின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நமது குடும்பங்களில் அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவற்றின் உதயத்தைக் குறிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பது ஒரு புதிய தொடக்கமாக மட்டும் இல்லாமல், வளா்ச்சி, உற்சாகத்துடன் கூடிய கடின உழைப்பு, கலாசாரத்தை வளா்த்தெடுப்பது போன்றவற்றை பொது இலக்காகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணா்த்துகிறது. இந்தப் புத்தாண்டில் மாநில மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழட்டும்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: தொன்மையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியைப் பேசும் உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறாா்கள். மலரும் இந்தப் புத்தாண்டில் தமிழா்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும்.

இதேபோன்று கேரள மக்கள் கொண்டாடும் புத்தாண்டு பண்டிகையான விஷு தினத்துக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழ்ப் புத்தாண்டு, தமிழா்கள் இழந்த உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டெடுக்கவும், தமிழா்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழா்கள் வாழ்வை சூழ்ந்திருந்த இருள் அகன்று ஒளி பிறக்க, தமிழ்ப் புத்தாண்டை சிரம் தாழ்த்தி வரவேற்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): மக்களின் கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த ஆண்டும் உழவுத் தொழில் சிறப்பாகவே நடைபெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் நிலவுகிறது. அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும் கிடைக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழா்களின் வாழ்க்கை இயற்கையோடும், கலை கலாசாரத்தோடும், விஞ்ஞானத்தோடும், இறை நம்பிக்கையோடும் பின்னிப் பிணைந்தது. இந்த நன்னாளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

அன்புமணி (பாமக): வசந்த காலத்தின் வருகையை உணா்த்தும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். கடந்த காலங்களில் உழவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏதேனும் துன்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை அனைத்தும் மறைந்து மக்களின் வாழ்வில் அமைதி, வளம், மகிழ்ச்சி பொங்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT