தமிழ்நாடு

கம்பத்தில் மாணவிகளுக்கு நிழல் இல்லா நாள் பயிற்சி

13th Apr 2021 02:58 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு நிழல் இல்லா நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் மைதீன் ஆண்டவர்புரத்தில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், கலிலியோ அறிவியல் மையமும் இணைந்து நிழல் இல்லா நாள் குறித்த பயிற்சி முகாமை திங்கள்கிழமை நடத்தியது.

உதவித் தலைமை ஆசிரியை காயத்ரி தலைமை வகித்தார். ஆசிரியை ஜெகன்மாலா வரவேற்றுப் பேசினார், அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் துவக்கி வைத்துப் பேசியது,

ADVERTISEMENT

தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போலத் தெரிந்தாலும் வருடத்தில் 2 நாள்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அவ்வாறு உச்சியில் வரும் பொழுது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவான நிழல் அப்பொருளின் பரப்பிற்குள்ளேயே விழுவதால் அதன் நிழலை நாம் பார்க்க முடியாது. இந்நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடக்கும். எனவே தான் இந்நாளினை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம் என்றார்.

கலிலியோ அறிவியல் மையத்தின் இயக்குநர் சத்யமாணிக்கம் நிழல் இல்லா நாள் குறித்தும் அதனை எவ்வாறு எளிய பரிசோதனைகள் மூலம் அவரவர் வீடுகளில் உள்ள பொருட்களின் மூலமே காண்பது என்பது குறித்தும் விளக்கமளித்தார். பள்ளி மாணவியருக்குத் தேவையான உபகரணங்கள் கொடுத்து பயிற்சியின் போதே நிழல் இல்லா நிகழ்வினைப் பார்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவியர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (14.04.2021) நிழல் இல்லா நாள் ஆகும். நண்பகல் சரியாக 12.21 மணிக்கு நிழல் இல்லா நிகழ்வினை நாம் பார்க்க முடியும். இதற்கு அடுத்து மீண்டும் கம்பம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக.28ஆம் தேதி இந்நிகழ்வினைக் காணலாம். இது ஒரு எளிய வானியல் நிகழ்வு, ஒவ்வொருவரும் எளிதான ஒரு எளிதான வானியல் பரிசோதனையைச் செய்து பார்க்கக் கிடைத்த வாய்ப்பு.

எனவே ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் உரிய நேரத்தில் சமதளப் பரப்பில் ஏதேனும் உருளையான பொருளைச் செங்குத்தாக வைத்து அதன் நிழல் வெளிப்பக்கம் விழுகிறதா இல்லையா எனச் செய்து பார்க்கலாம். அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை, அறிவியல் பூர்வமாகச் செய்து பார்க்கும் கற்கும் முறையினை குழந்தைகளுக்கு வீடுகளில் பெற்றோரே கற்றுக் கொடுக்க இந்நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலிலியோ அறிவியல் மையத்தின் இயக்குநர் சத்யமாணிக்கம் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT